தலைப்பு : இருமுனை
ஆசிரியர் : தூயன்
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்
விலை : 140/-

பதிவு செய்த நாள்

02 செப் 2017
17:38

மகால உளவியல், சரித்திரப் புனைவு, சிறுவர்களின் கதை உலகம், பெண் மனம், சிறுதெய்வ சரித்திரம், என்றுவிதவிதவிதமான ஏழு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு.
தொகுப்பின் தலைப்பான இருமுனை 'பைபோலார் டிஸார்டர்' என்னும் உளவியல் நோயை மைய இழையாகக் கொண்டு இரண்டிரண்டாக நகர்கிறது. பலருக்கும் இயல்பாக நகரும் அன்றாட வாழ்க்கையைப் பெரும் சலிப்புடன் எதிர் கொண்டு, தன்னையும், தன் நிழலையும் இருமுனைகளாக உணர்ந்து அலைக்கழியும் ஒருவன், தன் மறுமுனையைச் சந்திக்க நேர்வதும், தொடரும் வினோத நிகழ்வுகளும், அவற்றைப் பிணைக்கும் இழையாய்'இருமுனை'யும் அபாரம்.
துவக்கத்தில் ஒரு மனிதனின் மனக் கோளாறுகள் படர்க்கையிலிருந்து சொல்லப்படுவது சற்று உறுத்தலாகவே இருந்தாலும், இறுதியில் அதற்கான நியாயம் மிக இயல்பாகச் செய்யப் படுகிறது. என்னளவில், இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதை இது. கதையின் இந்த இறுதி வரிகள் ரொம்பவே யோசிக்க வைத்தன :
... அவளுக்கும் இந்நோயின் பாதிப்பு இருந்திருக்குமா? இருக்க வாய்ப்பு உண்டென்றால் எல்லோருமே பைபோலார் தன்மை உடையவர்கள்தானா? இக்கதையை மறு வாசிப்பு செய்யும்போது இன்னொரு கேள்வியொன்றும் தொற்றிக் கொண்டது. ஓவியங்களின் ஆதிவடிவம் நிழல்களிருந்துதான் தோன்றியதா?
மஞ்சள் நிற மீன் சிறுகதையில் கதை சொல்லும்/கேட்கும் அந்தச் சிறுவர் குழுவைக் கொஞ்சம் நெருக்கத்திலிருந்து கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வுடனே வாசிக்க நேர்ந்தது! ஒரு கதை சொல்லியின் திடீர் மறைவும், அவன் தன் கதைகளைப் போலவே கதையாவதும் பின் தேய்ந்து மறைவதுமான ஒரு பரந்த காட்சியை அத்தனை இயல்பான பால்யத்தின் மொழியில் வாசித்தது மறக்க இயலாத வாசிப்பனுபவம்.
தொகுப்பின் பல இடங்களில், கட்டற்று அலைதலைத் தேடும் மனநிலையையும், அதன் விளைவாகவே எதிர்கொள்ளும் குறுக்கமுமான இவ்வாழ்வின் பாதைகளைச் சொல்பவையாக  மீண்டும் மீண்டும் பன்றிகளும்,செருப்புத் தேய்தலும், கால்களைப் பற்றி நகரும் நிழலும் தோன்றுகின்றன.
ஒற்றைக்கைத் துலையன் குறுநாவல் மிக வித்தியாசமான கதை சொல்லல் முயற்சி..45 பக்கங்களில் ஒரு சிறு துண்டும் செதுக்கியிருக்கலாமே எனத் தோன்றும் பிசிறுடன் இல்லை. ஆரம்பத்தில் அம்மாவின் உயரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் விடலையின் வாயிலில் இருப்பதாகத் தோற்றமளிக்கும் கதைசொல்லி, கதை வளர வளரத் தானும் வளர்கிறான். அக்காவின் மனப் பிறழ்வைக் கண்டு பயப்படாமல் அவளைப் புரிந்து கொள்ளும் மிகக் கனமான கதாபாத்திரம், தன் வயதின் சகல நியாயங்களையும் கொண்டும் இயங்குவது இந்தக் கதையின் அற்புதமான முரண். இறுதியில், வெட்டியானுடன் பேசும் (மிகக் குறைவாகப் பேசும்) காட்சியில் மிகப் பெரியவனாக உருமாறுகிறான்.  நிகழ்கதைக்கும், அதில் சொல்லப் படும் இன்னொரு கதைக்குமான இணைப்புகளில் இருக்கும் தெளிவு, இந்த ஒரு கதாபாத்திரத்தின் முரணிலும் இருக்கிறது.
எல்லாவற்றையும் சொல்லிவிடாமல் கொஞ்சம் தவிர்த்துப் புரிய வைக்கும் வாசகப் புரிதலுக்குத் தனித்த நன்றிகள்!
இவ்விடத்தில் சொல்ல இன்னொன்றும் இருக்கிறது. கதையின் முடிவு முன்னரே தெரிந்துவிடுவதைக் குறையாகக் கருதுவதன் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. தெரிந்துவிடும்தான் சில கதைகளில். ஆனால் அந்த முடிவை நோக்கிய பயணமும், மொழி நடையும், சொல்லும் நேர்த்தியும் அதனை மேலும் செம்மைப் படுத்துவதாகத்தான் நான் சொல்வேன்.
இத்தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை எஞ்சுதல்.
ஒரு பெண்ணின் அகவெளியில் சுதந்திரமாக அதே சமயத்தில் அவள் அகவெளிக்குள் மாத்திரம் கட்டுண்டு எழுதப்பட்டிருக்கும் மிக அழகான சிறுகதை. கச்சிதமான கதாபாத்திரங்கள். மருதாணித் தொப்பிகளில் தொடங்கி பிள்ளை இழந்தவளின் பின்னிரவுப் பதட்டம் வரை மிகக் கூர்மையான பார்வையுடன் எழுதப்பட்டிருக்கும் கதை. 
சமீபத்தில் என்னைக் கவர்ந்த மிகச் சில கதைகளில் ஒன்று!
மொழியை மதிக்கும் கதைசொல்லிகள் எத்தனை இருண்மையைப் பேசினாலும், இருட்கதிராலும் வண்ணப் பிரிகை நேர்த்துகிறார்கள்.

எஞ்சுதல் கதையில் என் பெருவிருப்பச் சொற்களில் ஒன்றான நித்தியம் என்பதை மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். (அநித்தியம் என்ற சொல்லும் இதே அளவுக்குப் பிடிக்கும்... ஒருவேளை இதுதான் என்'இருமுனை' விருப்பம் போலும்!)

திருவிழாவிலிருந்து திரும்பிய இரவில் தனிமையில் நாயகி நினைத்துக் கொள்கிறாள் :

 அம்மன் அலங்காரங்களுடன் தனிமையில் அமர்ந்திருக்கிறாள். நித்தியத் தனிமை

 என்ன ஒரு அற்புதக் கச்சிதம்?!! அவளுக்கு இந்த எண்ணவோட்டத்திலிருந்து மனத்தைத் திருப்பவேண்டிய அவசியம் கதையில் இருக்கிறது, எனக்கு அதெல்லாம் இருக்கவில்லை. இரண்டு சொற்களின் நீள அகலத்துக்குள் வெகுநேரம் வசிக்க முடிந்தது. அம்மனுக்கு மட்டுமா? பெருகிக் கொண்டேயிருக்கும் கூட்டத்தின் இடையிலும், அன்றாட வாழ்வின் சவால்களுக்கிடையிலும், அன்பைப் பொழியும் சுற்றம் உடனிருக்கையிலும் கூட... எல்லோருக்கும்..ஒவ்வொருவருக்கும் வாய்க்கிறதுதானே நித்தியத் தனிமை. இவ்விரண்டு சொற்களுக்காக மட்டுமே தனியொரு சபாஷ்!
இத்தொகுப்பின் முன்னுரையில் தன் தந்தையின் கனத்த அட்டை கொண்ட புத்தகங்களைப் பார்க்கையில் அவைபெயர்த்தெடுத்த கல் படிக்கட்டுகள் போலத் தெரியும் என்ற குறிப்பில் தொடங்கும் ரசனையும், மொழியின் அழகும் எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.
- தென்றல்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)